என் தோழியின் கணவர் அவரது செல்போனில் சில செயலிகளை இன்ஸ்டால் செய்து அவற்றின் மூலம் என் தோழிக்குத் தெரியாமல் அவளது ஸ்மார்ட் போன் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதாகச் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. ஒருவருக்குத் தெரியாமலேயே அவரது செல்போனில் இருந்து தகவல்களை எடுக்கலாம், ஒளிப்படம் எடுக்கலாம், வீடியோ ரெக்கார்ட் செய்யலாம் என்றும் சொன்னாள். அதைக் கேட்ட பிறகு செல்போனைக் கையில் எடுக்கவே பயமாக இருக்கிறது. என் தோழி சொல்வதெல்லாம் உண்மைதானா?
– பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.
வினோத் ஆறுமுகம்,
சைபர் சமூக ஆர்வலர்.
பாதுகாப்பற்ற, செல்போனுக் குத் தீமை விளை விக்கக்கூடிய செயலிகளை இன்ஸ்டால் செய்வது ஆபத்தானது. அதுவும் ஒருவரை வேவு பார்ப்பதற்காக அப்படிச் செய்வது சட்டப்படி குற்றம். நம் ரத்த உறவுகளாகவே இருந்தாலும், அவர்களை உளவு பார்க்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றம். சில செயலிகளை இன்ஸ்டால் செய்வதன் மூலம் மற்றொருவரின் செல்போன் தகவல்களைப் பார்க்க முடியும் என்று நிறைய வீடியோக்களும் ரீல்களும் இணையத்தில் உலவுகின்றன. ‘உங்க பாய் பிரெண்ட்/கேர்ள் பிரெண்ட்/கணவன்/மனைவி யார்கிட்ட பேசுனாங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணுமா..’ என்று தொடங் கும் ரீல்களைப் பார்த்ததுமே ஸ்கிப் செய்துவிடுங்கள். காரணம் அவற்றில் இடம் பெற்றிருப்பது முற்றிலும் தவறான தகவல். அவர்கள் சொல்கிற செயலிகளையும் வழிமுறைகளையும் நாம் பின்பற்றினால் நம்முடைய செல்போனில் இருந்தே தகவல்கள் திருடப்படக்கூடும். பாதுகாப்பற்ற தளங்களில் இருந்து திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்வது, பாதுகாப்பற்ற வலை தளங்களுக்குச் செல்வது, தேவையற்ற மென் பொருளை தரவிறக்கம் செய்வது போன்றவை ஆபத்தானவை.
நீங்கள் பயன்படுத்தாத நிலையிலும் செல்போன் சூடானால் உங்கள் செல்போனை யாரோ ‘ஹேக்’ செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல் உங்கள் செல்போனில் ‘டவுன்லோடு’ ஃபைல்களைவிட ‘அப்லோடு’ ஃபைல்கள் அதிகமாகக் காட்டினாலும் உங்கள் செல்போன் தகவல்களை யாரோ திருடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

செல்போன் தொழில்நுட்பத்தில் வித்தகராக இருப்பவரால் ஒருவரது செல்போனை அவருக் குத் தெரியாமல் ‘ஹேக்’ செய்ய முடியும். இதைத் தவிர்க்க நம் செல்போன் தகவல்களை யாருடனும் பகிரக் கூடாது. சிலர் ‘லைவ் லொகேஷன்’ ஷேர் செய்வார்கள். இதுவும் நல்லதல்ல. தரமான ‘ஆன்ட்டி வைரஸ்’ மென்பொருளை இன்ஸ்டால் செய்து வைத்துக்கொண்டால் தேவையற்ற செயலிகளில் இருந்தும் தகவல் திருட்டில் இருந்தும் தப்பிக்க லாம். உங்கள் செல்போனில் ஏதும் ‘மால்வேர்’ இருந்தால் இது காட்டிக்கொடுத்துவிடுவதோடு அதை அப்புறப்படுத்திவிடும். ஸ்மார்ட் போன்களைப் பயன் படுத்தும்போது கவனத்துடன் இருங்கள். நம் சிறு கவனப் பிசகு கூடப் பெரிய சிக்கலில் நம்மை மாட்டிவிடக்கூடும்.