அநுர அரசாங்கத்தின் செயற்பாட்டால் நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர் என்ற வகையில் மகிந்தவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய சில வாகனங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், இதனை பொருட்படுத்தாது அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க புலனாய்வு அமைப்புக்களிடமிருந்து ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.
.இந்நிலையில், மகிந்த ராஜபக்ச தற்போது தங்காலை வீட்டில் தங்கியுள்ளதால், அவர் கொழும்பு திரும்பிய பின்னர் வாகனங்களை கையளிப்பார் என பேச்சாளர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.