fourty seven puduchery fisherman arrested 7148
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களின் 5 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 47 மீனவர்களை கைது செய்தனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
அன்று இரவு தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 4 விசைப்படகுகளை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
மேலும், படகுகளில் இருந்த 30 மீனவர்களை கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், அனைவரையும் மீன்வளத் துறையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை அக். 23-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களில் ஒருவரான முனியராஜிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக கஞ்சாவை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
17 மீனவர்கள் கைது… அதேபோல, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விஜயன் சிவராமன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்த 17 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
பின்னர், 17 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 47 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
2025-ல் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான்.
மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர். எனவே, மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் கோரிக்கை: மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோரும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
fourty seven puduchery fisherman arrested 7148