தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (27) இரவு கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டத்தில் தனது கட்சியின் தலைவர் என்ற முறையில் மக்களைச் சந்திக்க வந்த விஜய்யின் வேனைச் சுற்றி லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
விஜய் பேசத் தொடங்கியபோது, கட்டுக்கடங்காத கூட்டம் வேனுக்கு மிக அருகில் கூடியதால், கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
அப்போது, விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் அம்புயூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விஜய் தனது உரையை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லத் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர்.
இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
விஜய்யின் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.
கரூரில் நிலவு வரும் அசாதாரண சூழல் காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாலை கரூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.